மனதை உலுக்கிய பாசப் போராட்டம்!

Home

shadow

சீனாவைச் சேர்ந்த க்வான் ஃபென்ஸியாங், ஸு லிடா தம்பதியர், 22 ஆண்டுகளுக்கு முன் விட்டுச் சென்ற இடத்தில் தங்கள் மகளை மீண்டும் சந்தித்தனர். இவர்களது மகளின் வளர்ப்புத் தந்தையும் தாயும் அமெரிக்கர்கள். கேத்தரின் சூ போலர் கல்லூரி மாணவியாக இருக்கிறார். “1995-ம் ஆண்டு எங்கள் 2-வது மகள் பிறந்தாள். சீனாவில் ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்த காலகட்டம். அத்துடன் எங்கள் குடும்பம் வறுமையில் வாடியது. எங்களுக்கு வேறு வழி தெரியாமல், பிறந்த 5-வது நாள் ஒரு காய்கறிச் சந்தையில் குழந்தையை வைத்துவிட்டோம். எங்கள் மகள் ஜிங்ஸி 7-வது மாதம் 24-ந் தேதி, காலை 10 மணிக்குப் பிறந்தாள். வறுமை காரணமாக எங்கள் செல்ல மகளைப் பிரிகிறோம். நல்ல உள்ளம் கொண்டவர்கள் இவளின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும். 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா நேரத்தில் ஒருநாள் காலை ஹங்ஸொவ் பகுதியில் உள்ள உடைந்த பாலத்தில் சந்திப்போம் என்று எழுதி வைத்துவிட்டு ஒளிந்துகொண்டோம். குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த ஒருவர் அவளைத் தூக்கிச் செல்வதைக் கண்டு, சற்று நிம்மதியாக வீடு திரும்பினோம். ஆனால் ஒவ்வொரு நாளும் எங்கள் மகளை நினைத்து அழுதுகொண்டே இருந்தோம். திருவிழாவின்போது மகளுக்காக உடைந்த பாலத்தில் காத்திருந்தோம். அப்போதுதான் எங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட ஆவணப்பட இயக்குநர் ஒருவர், மகளைக் கண்டுபிடித்து தருவதாகச் சொன்னார்” என்கிறார் ஸு லிடா. காப்பகத்தில் விடப்பட்ட குழந்தையை 1996-ம் ஆண்டு ஓர் அமெரிக்கத் தம்பதி தத்தெடுத்துக்கொண்டது. “எங்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். ஆனாலும் மகளை விரும்பி ஏற்றுக்கொண்டோம். கேத்தரின் என்று பெயர் சூட்டினோம். உருவம் சீனர்போல் இருந்தாலும் அவள் அமெரிக்கராகவே வளர்ந்தாள். என்றாவது விவரம் தெரிந்து கேள்வி கேட்கும்போது, உண்மையைச் சொல்ல நினைத்தோம். கல்லூரி சென்றபோதுதான் அவள் சந்தேகம் கேட்டாள். உண்மையைச் சொல்லி, அவளது பெற்றோர் எழுதிய கடிதத்தையும் கொடுத்தோம். அந்த நாள் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. இளம் பெண்ணின் போராட்டத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. பெற்றோரைப் பார்க்கலாமா என்று கேட்டவுடன், ஒப்புக்கொண்டாள். அப்போதுதான் சீனாவிலிருந்து ஓர் ஆவணப்பட இயக்குநர் சமூகவலைத்தளம் மூலம் தொடர்புகொண்டார். ஜிங்ஸி என்ற பெயர் சொன்னதும் எங்கள் மகள் என்று உறுதி செய்துகொண்டோம். சீனா சென்றோம். உடைந்த பாலத்தில் அவளது பெற்றோர் காத்திருந்தனர். மகளைக் கண்டதும் அம்மா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். எல்லோரையும் கண்கலங்க வைத்துவிட்டது” என்று வளர்ப்பு பெற்றோர் கென், ரூத் தெரிவித்தனர். “அம்மாவும் அப்பாவும் கோடி முறை மன்னிப்புக் கேட்பதாகச் சொல்லி அழுதார்கள். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. எனக்கு மாண்டரின் புரியவில்லை. ஆனாலும் பாசத்தைப் புரிந்துகொண்டேன். உருவம் சீனராகவும் உள்ளம் அமெரிக்கராகவும் இருக்கும் எனக்கு உணவு, மொழி, கலாச்சாரம் எல்லாமே அந்நியமாக இருந்தது. என்னைப் பெற்றவர்களுடன் தொடர்பில் இருப்பேன். ஆனால் என் வளர்ப்பு பெற்றோரிடம்தான் வாழ்வேன்” என்கிறார் கேத்தரின். மனதை உலுக்கிய பாசப் போராட்டம்!

இது தொடர்பான செய்திகள் :