அமெரிக்கா: டிரம்ப்பின் வரிக்குறைப்பு மற்றும் சீர்திருத்த மசோதா செனட் சபையில் நிறைவேறியது

Home

shadow

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும் முந்தயை அதிபர் ஒபாமாவின் மருத்துவ காப்பீட்டு முறையை நீக்கும் மசோதாவை கொண்டு வந்தார். ஆனால், ஆளும் குடியரசு கட்சி உறுப்பினர்களே அந்த மசோதவை தோற்கடித்தனர். இதனையடுத்து, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள வரி குறைப்பு மற்றும் சீர்திருத்த மசோதவை அவர் கையில் எடுத்தார். அமெரிக்க காங்கிரஸில் (பாராளுமன்றம்) செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரண்டு அவைகள் உள்ளன. இரு அவைகளிலும், குடியரசு கட்சி பெரும்பான்மையாகவே உள்ளது. இருப்பினும், இம்மசோதா சிக்கலின்றி நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்தது. இதில், பிரதிநிதிகள் சபையில் ஏற்கனவே இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, செனட் சபையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 51 பேரும், எதிராக 48 பேரும் ஓட்டளித்தனர். இதனால், மசோதா நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் உள்ள கார்பரேட் நிறுவனங்கள் 15 முதல் 35 சதவிகிதம் வரை வரி செலுத்தி வருகின்றன. இதனை சீரமைத்து 21 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு இம்மசோதா வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது. அதே வேளையில், நடுத்தர மக்களை இம்மசோதா பாதிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மருத்துவ காப்பீட்டு தொகையை மக்களே செலுத்தும் வகையில் அம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வரி சீர்திருத்தம் வரும் 2018-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :