இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 215 பேர் உயிரிழப்பு

Home

shadow

இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.


இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள மூன்று தேவாலயத்தில் உள்ளூர் நேரப்படி காலை 8.45 மணியளவில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த சமயத்தில், ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த மக்கள் குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் கொழும்பு நகரில் உள்ள மூன்று நட்சத்திர விடுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் வெளிநாடுகளைச் சேர்ந்த 27-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல்கள் நடந்து சில மணி நேரங்கள் கடந்த பிறகு, இலங்கை வன உயிரியல் பூங்கா அருகேயுள்ள மற்றொரு நட்சத்திர விடுதியிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.  தாக்குதலில் தொடர்புடையவர்களை தேடிச் சென்ற இலங்கை காவல்துறையினர் கொழும்பில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்த முற்பட்டனர். அப்போது அதை முறியடிக்கும் வகையில் பயங்கரவாதி ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர குண்டுவெடிப்புகளில் இதுவரை 215 பேர் உயிரிழிந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரையில் 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாட்டில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்ததைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது பிற இடங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் விடுமுறையில் இருந்து காவலர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். அதேபோல் விடுப்பில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களும் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பேசிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா மத வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் நடத்தப்பட்டுள்ள கொடூரமான தாக்குதல்கள் மிகுந்த வேதனையையும், வலியையும் தருவதாகவும் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோழைத்தனமான இந்த கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்த தருணத்தில் இலங்கை மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், நிலமையை கட்டுக்குள் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்

போப் பிரான்சிஸ் தெரிவித்த கருத்தில் வழிபாட்டுக்காக கூடியிருந்த சமயத்தில் மிகக் கொடுமையான முறையில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் ஆகியோருக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாக தெரிவித்தார். இலங்கையில் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழ்ந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் பல தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கொலும்பு சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டை காவல்துறையினர் செயலிலக்க வைத்துள்ளனர்.  தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து இலங்கையில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.


இது தொடர்பான செய்திகள் :