கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்த காவலர்

Home

shadow

                     கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்த காவலர் 

                     துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் கர்பரல் ஹனன் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த இந்தியாவை சேர்த்த கர்ப்பிணி பெண் ஒருவர் வயிறு வலிப்பதாக கூறி ஹனனிடம் உதவி கேட்டார்.  தான் 6 மாதம் 5 நாள் கர்ப்பமாக இருப்பதாக அந்தப் பெண் தெரிவித்தார். அவசர உதவி எண்ணிற்கு தகவல் தெரிவித்தார் ஹனன். அப்பெண்ணிற்கு ஏற்பட்டிருப்பது  பிரசவ வலி என்பதை  அறிந்த  காவலர் ஹனன், தாமதிக்காமல், உடனே  அப்பெண்ணை பரிசோதனை அறைக்கு அழைத்து சென்றார். கர்ப்பிணி பெண்ணிற்கு வலி அதிகமாகி குழந்தை வெளியே வர முயற்சித்தது. ஆனால், தலை திரும்பியிருந்ததால் குழந்தை வெளிவர முடியாமல் போனது. ஆனால் லாவகமாக குழந்தையை பிடித்து வெளியே எடுத்துள்ளார் ஹனன் .

                    இந்நிகழ்வு பற்றி பேட்டி அளித்த ஹனன், குழந்தை வெளியில்  வந்தவுடன், அழாமல் இருந்ததை கண்டு பதறிப்போய், குழந்தையின் நெஞ்சு பகுதியில் அழுத்தம் கொடுத்து, இதயத் துடிப்பை அதிகரித்ததாகக் கூறினார்.  குழந்தை அழும்  இனிமையான குரலை கேட்டதும்தான் தனக்கு நிம்மதி ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

                     அதன் பின் அங்கு வந்த மருத்துவர் குழுவினர், குழந்தையையும், தாயையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . துரிதமாக செயல்பட்டு தாயையும் சேயையும் காப்பாற்றியதற்காக, காவலர் ஹனனிற்கு,  துபாய் காவல்துறை சான்றிதழ் வழங்கி கௌரவித்தது. துணிச்சலுடன் செயல்பட்ட காவலர் ஹனனிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  

இது தொடர்பான செய்திகள் :