கிறிஸ்துமஸ் நாளில் தாக்குதலுக்கு திட்டம்: பிரிட்டனில் தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு

Home

shadow

பிரிட்டனில் கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு நெருங்கி வருவதால் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியான பொருட்கள் கிடந்தால் அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் துணையுடன் அகற்றி வருகின்றனர். இந்நிலையில் உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் வடக்கு இங்கிலாந்தின் டெர்பிஷைர் கவுண்டியில் உள்ள செஸ்டர்பீல்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது 31 வயது நபர் கைது செய்யப்பட்டார். அத்துடன் உடனடியாக அந்த வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களை வெளியேற்றிவிட்டு, அனைத்து இடங்களிலும் சோதனையிட்டனர். இதேபோல் ஷெபீல்டு கவுண்டியில் வெவ்வேறு இடங்களில் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை வெஸ்ட் யார்க்ஷைர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் கைது செய்யப்படாவிட்டால் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :