ஜாலியன்வாலாபாக் படுகொலை பிரிட்டன்-இந்திய வரலாற்றில் அவமானகரமானது - தெரஸா மே

Home

shadow

ஜாலியன்வாலாபாக் படுகொலை பிரிட்டன்-இந்திய வரலாற்றில் அவமானகரமான தழும்பாக மாறியுள்ளதாக  பிரிட்டன் பிரதமர் தெரஸா மே தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி, பஞ்சாப் மாநிலம், ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஒன்று திரண்ட மக்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர். அந்த நேரத்தில், பிரிட்டன்-இந்தியப் படையினர் 50 பேருடன் அங்கு வந்த பிரிட்டன் ராணுவ ஜெனரல் டயர், மக்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இந்திய மக்கள் உயிரிழந்தனர். இந்தப் படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இது தொடர்பான விவாதத்தின் போது, மன்னிப்பு கேட்க, இங்கிலாந்தின் துணை வெளியுறவு துறை அமைச்சர் தயக்கம் தெரிவித்தார். இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் தெரசா மே, 1919ஆம் ஆண்டில் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் இந்தியாபிரிட்டன் வரலாற்றில் அவமானகரமான தழும்பாக மாறியுள்ளதாகவும், 1997ஆம் ஆண்டு ஜாலியன்வாலாபாக் இடத்தை பார்வையிடும் முன் இது குறித்து பேசிய பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், இந்தியா உடனான கடந்த கால வரலாற்றின் மோசமான உதாரணமாக இந்த சம்பவம் உள்ளதாக தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், பிரிட்டன் சமூகத்தின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு அளப்பறியது எனவும், வரும் காலங்களில் இந்தியாபிரிட்டன் இடையேயான உறவு செழுமை அடையும் என பிரிட்டன் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :