பிரெக்சிட் நடவடிக்கைக்கான காலக்கெடுவை ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

Home

shadow

பிரெக்சிட் நடவடிக்கைக்கான காலக்கெடுவை ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு நடைபெற்ற வாக்கெடுப்பு வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பை செயல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களால், பிரெக்சிட்டை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் செயல்படுத்துவது சாத்தியமற்றதாக மாறியுள்ளது. இதனை அடுத்து பிரெக்சிட்டை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க கோரி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரெசல்சில் செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய கமிஷனின் தலைவர்களான, டொனால்ட் டஸ்க் மற்றும் ஜன்கர், பிரெக்சிட் நடவடிக்கைக்கான காலக்கெடுவை ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்வதாக தெரிவித்தனர். அடுத்த வாரம் நடைபெறும் வாக்கெடுப்பில் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் எம்.பி-க்கள் ஒப்புதல் அளித்தால், பிரெக்சிட் நடவடிக்கைக்கான காலக்கெடு மே 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனவும், அவ்வாறு அவர்கள் ஒப்புதல் அளிக்காவிட்டால், ஏப்ரல் 12-ஆம் தேதி வரை மட்டுமே காலக்கெடு நீட்டிக்கப்படும் என தெரிவித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :