முதல்முறையாக சந்திக்கபோகும் அதிபர் விளாடிமின் புடின், அதிபர் கிம் ஜோங்-உன்

Home

shadow

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை முதல்முறையாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்..


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ரஷ்யாவின் விளாதிவோஸ்டாக் நகருக்கு நேற்று வந்தடைந்தார் . மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அவரது பயணத் திட்டம் குறித்த தகவலை, அவர் பிரத்யேக ரயில் மூலம் ரஷ்யா புறப்படுவதற்கு சற்று முன்னர் வட கொரிய அரசு செய்தி நிறுவனம்  வெளியிட்டது. அந்த ரயிலில் கிம் ஜேங்-உன்னுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ரீ யாங்-ஹோ உள்ளிட்ட குழுவினர் ரஷ்யா சென்றதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதற்கிடையே, டியூமென் நதியைக் கடந்து ரஷ்ய எல்லைக்குள் நேற்று நுழைந்த கிம் ஜோங்-உன்னின் பிரத்யேக ரயில், எல்லை நகரான காசனில் நிறுத்தப்பட்டது. அங்கு கிம் ஜோங்-உன்னுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே, ரஷ்யாவுக்கு ரயில் மூலம் வந்த கிம் ஜோங்-உன்னின் தந்தை கிம் ஜோங்-இல் மற்றும் தாத்தா கிம் இல்-சங் ஆகியோருக்கு இந்த ரயில் நிலையத்தில் இதே போன்ற வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, விளாதிவோஸ்டாக் நகரை வந்தடைந்த கிம் ஜோங்-உன்,  செய்தியாளர்களிடம், பேசினார், அதில் தனது இந்த ரஷிய சுற்றுப் பயணம் மிகச் சிறப்பான வெற்றியைப் பெறும் என்று நம்புவதாகவும் அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்துவது, வட கொரியா - ரஷ்யா இடையிலான உறவை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல் முறையாக ரஷ்ய அதிபர் புதினை கிம் சந்தித்து பேசுகிறார். அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக கிம் ஜோங் உன் கடந்த ஆண்டு அறிவித்ததைத் தொடர்ந்து, புதினின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.


இது தொடர்பான செய்திகள் :