முன்னாள் அதிபரை தற்போதைய அதிபர் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்துள்ளார்

Home

shadow

பெரு நாட்டின் அதிபராக கடந்த 1990 முதல் 2000-ம் ஆண்டுவரை பதவி வகித்தவர் ஆல்பெர்டோ புயூஜிமோரி. அந்நாட்டில் அப்போது தலைவிரித்தாடிய மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை இவர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதாக ஒருதரப்பினர் இன்றும் கருதுகின்றனர். மேலும், அங்கு கோலோச்சி வந்த இடதுசாரி இயக்கத்தினரை ஈவிரக்கமின்றி கொல்லவும் இவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆல்பெர்டோ புயூஜிமோரி தனது பதவிக் காலத்தில் ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட ஒரு வழக்கில் கடந்த 2007-ம் ஆண்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கொலைப்படையினரை ஏவி மனிதாபிமானமற்ற முறையிலும், மனித உரிமைகளை மீறிய வகையிலும் தனது அரசியல் எதிரிகளை கொன்று குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சுமார் பத்தாண்டுகளாக சிறையில் அடைப்பட்டிருக்கும் முன்னாள் அதிபர் ஆல்பெர்டோ புயூஜிமோரிக்கு தற்போது வயது 79. குறைவான ரத்த அழுத்தம், மற்றும் தடுமாற்றமான இதய துடிப்பினால் மிகவும் மோசமான உடல்நிலையில் இருக்கும் அவரை சிறையில் இருந்து விடுதலை செய்து சிகிச்சை அளிக்க அரசு உதவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதற்கிடையில், பெரு நாட்டின் தற்போதைய அதிபர் பெட்ரோ பாப்லோ குக்ஸின்ஸ்கி என்பவருக்கு எதிராக சமீபத்தில் ஊழல் புகார்கள் கிளம்பின. இதனால், அதிபர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படும் சூழல் உருவானது. இந்த ஆபத்தில் இருந்து அவரை காப்பாற்ற முன்னாள் அதிபர் ஆல்பெர்டோ புயூஜிமோரியின் ஆதரவாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்தனர்.

 

இதற்கு அவர்கள் ஒரு நிபந்தனை விதித்தனர். உடல்நலக் குறைவால் சிறையில் அவதிப்படும் முன்னாள் அதிபர் ஆல்பெர்டோ புயூஜிமோரியை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

இதையடுத்து, ஆல்பெர்டோ புயூஜிமோரிக்கு பொது மன்னிப்பு வழங்கி அதிபர் பெட்ரோ பாப்லோ குக்ஸின்ஸ்கி இன்று உத்தரவிட்டார். சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர் அந்நாட்டின் தலைநகரான லிமா நகரில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பான செய்திகள் :