அதிமுக சமுத்திரம் ; அமமுக டம்ளர் தண்ணீர் - அமைச்சர் ஜெயக்குமார்

Home

shadow

               அதிமுக சமுத்திரம் - அமமுக டம்ளர் தண்ணீர் - அமைச்சர் ஜெயக்குமார்

               பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என எதிர்பார்ப்பதாக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

                 நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், விளாச்சேரி பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஜெயலலிதாவை ஊன்றுகோலாக பயன்படுத்தி அரசியலில் முன்னேறியவர்கள், தற்போது திமுகவுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு, ஜெயலலிதா அரசுக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். அனைத்து இடங்களுக்கும் செல்லும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது தொகுதியான ஆர்.கே.நகருக்கு செல்லாதது ஏன் ? எனவும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். அதிமுக சமுத்திரம் என்றும், அமமுக டம்ளர் தண்ணீர் என்றும் கூறிய ஜெயக்குமார், அக்கட்சியை தாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என குறிப்பிட்டார். 

               இந்தி நடிகர் சஞ்சய் தத்தை, தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுவித்தது போலவே, ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :