ஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர்

Home

shadow

                    ஜோலார்பேட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் – அமைச்சர் வேலுமணி

ஜோலார்பேட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர், கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலையத்தில் சுத்திகரிப்பு செய்தபின், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில்  உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்தியது.

இதற்கான பணிகளை, ரயில்வே துறை அதிகாரிகள், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் மற்றும் மேட்டுச் சக்கரக்குப்பம் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக தீவிரமாக மேற்கொண்டனர்.

இதற்கிடையே, பணிகள் நிறைவடைந்த நிலையில் 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரெயில் இன்று ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் சென்னை வில்லிவாக்கத்துக்கு 11.30 மணியளவில் வந்தடைந்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி பேசினார். அப்போது, முதல்கட்டமாக 25 லட்சம் லிட்டர் தண்ணீர், வேகன்கள் மூலம் சென்னை வந்தது சேர்ந்துள்ளதாகவும், தினமும் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் எனவும் கூறினார்.

மேலும், ஜோலார்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்திற்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டுள்ள தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் செய்த பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :