டிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியது மதுரை ஐகோர்ட்

Home

shadow

டிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

"டிக் டாக்' செயலியால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த  பிப்ரவரி மாதம் "டிக் டாக்' செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், "டிக் டாக்" செயலியை தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து  "டிக் டாக்' நிறுவனம், உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், "டிக் டாக்' நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது. இதனை அடுத்து நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்த போது, விஞ்ஞானப் பூர்வமாக அணுகவும், ஆலோசனை பெறுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் அரவிந்த் தத்தாவிடம்,  "டிக் டாக்' செயலி குறித்த விளக்கம் பெறப்பட்டது. பின்னர் "டிக் டாக்' நிறுவனம் தரப்பில், "டிக் டாக்' செயலியில் இருந்த ஆபாசமான 60 லட்சம் விடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் மேலும் சர்வதேச அளவில் 13 வயது நிரம்பியவர்கள் "டிக் டாக்' செயலியை பயன்படுத்தலாம் என்ற விதி உள்ளது எனவும், இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள்தான் பயன்படுத்த முடியும் என்ற விதியும், பல பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்தது. மேலும், சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களின் தவறான விடியோக்கள் பதிவேற்றம் செய்யமுடியாத அளவிற்கு பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதகவும்., அதையும் மீறி ஆபாசம் மற்றும் வன்முறையான விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டால் உடனடியாக அதை நீக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து "டிக் டாக்' நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  "டிக் டாக்' செயலி மீதான தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால் டிக்டாக் நிறுவனம் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.


இது தொடர்பான செய்திகள் :