தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

Home

shadow

  நாகை மாவட்டம் வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் அதிகாலை ஒரு மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்தனை வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்தனை செய்தனர்.    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் கிறிஸ்தவர்களின் புனித தலமாக விளங்குகிறது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில், தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இருந்தும் திரளான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர். இதில் கிறிஸ்து பிறப்பினை நினைவுபடுத்தும் விதமாக குழுந்தை ஏசுவின் பிறப்பு காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து வேதாக பாடல்கள் வாசித்து திருப்பலி நடைபெற்றது. இதைதொடர்ந்து பேராலயத்தில் இன்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்தனை தமிழ், இந்தி, மலையாளம், கொங்கனி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடைபெறுகிறது.

      கிறிஸ்துமஸ் பண்டிகையினையொட்டி பேராலய பகுதிகள் அனைத்தும் மின் விளக்குகளினால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வேளாங்கண்ணி சுற்றுவட்டார பகுதிகளில் குடில்கள் அமைக்கப்பட்டு அவையும் வண்ண, வண்ண விளக்குகளினால் அலங்கரரிக்கப்பட்டிருந்தன. வேளாங்கண்ணிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் குவிந்துள்ளதால் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

      வேலூரில் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு வேலூர் அண்ணா சாலையிலுள்ள சி.எஸ்.ஐ மத்திய பேராலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

      இதேபோன்று வின்னேற்பு அன்னை ஆலயத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள், நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடத்தி ஏசு கிறிஸ்து பிறந்ததை, ஏசு பொம்மையை உயரத்தில் தூக்கி காட்டி மகிழ்ச்சியடைந்தனர். இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு பிரார்தனை செய்தனர். கிறிஸ்துவ பாடல்களும் பாடப்பட்டு, கிறிஸ்துமஸ் குடில்களும் அமைக்கப்பட்டது.

      இதே போன்று மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் திண்டிவனம் தூய உலக மாதா ஆலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தேவாலயம் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் குழந்தை ஏசு பொம்மையை தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு, உலக அமைதிக்காகவும், மக்கள் நலன் வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.

இதேபோன்று திண்டுக்கல்லில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு ஏசு பாடல்களை பாடி வழிவாடு நடத்தினர்.

காரைக்கால் புகழ் பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஏசுபிரான் மாட்டுத் தொழுவத்தில் பிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலய பங்கு தந்தை அந்தோணி லூர்து அடிகளார், உதவி பங்கு தந்தை விக்டர் இமானுவல் மற்றும் சிரில் ஆகியோர் சிறப்பு திருப்பலியினை நிறைவேற்றி, கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியையும் நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நகர் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுருந்தனர்.

இது தொடர்பான செய்திகள் :