தமிழகம் - அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Home

shadow


        கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. தற்போது, முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அணைக்கு வரும் நீரின் அளவு 3 ஆயிரத்து 321 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அணையிலிருந்து மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 960 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 புள்ளி இரண்டு ஏழு அடி உயர்ந்துள்ளது. இதனால் அணையில் இருந்து குடிநீருக்காக ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியதை அடுத்து, அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், மஞ்சளாறு, சோத்துப்பாறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அணைகளும் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :