நதிகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது சரியே – உயர் நீதிமன்றம்

Home

shadow


             சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்க தவறியதாக தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த, பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையில் ஓடும் கூவம், அடையாறு நதி, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிக்க தவறிய தமிழக அரசின், மீது ஜவஹர்லால் சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கூவம், அடையாறு நதி, பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரி பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட காரணமான பொதுப் பணித்துறைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து, கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

அபராத உத்தரவை எதிர்த்து பொதுப் பணித்துறை, உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வு முன்பு வந்தது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், நதிகளை சுத்தப்படுத்த தமிழக அரசால் ரூ.604 கோடி ஒதுக்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

மேலும், ஏற்கனவே பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசிற்கு ரூ. 2 கோடி அபராதம் விதித்து பிறபித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார்.

அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.100  கோடி அபாரதம் விதித்து சரியே என தீர்ப்பு வழங்கி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

 

இது தொடர்பான செய்திகள் :