பொன்னமராவதி - ஆயிரக்கணக்கானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போது கலவரம்

Home

shadow

                         பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து  வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போது ஏற்பட்ட கலவரத்தில் 3 காவலர்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.   

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள ஒரு சமூகத்தினரை தவறாக சித்திரித்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அச்சமூகத்தினர் ஆயிரக்கணக்கானோர் நேற்று முந்தினம்  இரவு பொன்னமராவதி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் கூடுதல் போலீஸார் காவல் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, அடுத்து கலைந்து சென்றனர். ‘இந்நிலையில், நேற்று பொன்னமராவதி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் திரண்ட அச்சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உடனடி நடவடிக்கை கோரி காவல் நிலையத்தை நோக்கி திரண்டு வந்தனர். தகவலறிந்த ஐ.ஜி வரதராஜூலு, டிஐஜி லலிதா லட்சுமி சம்பவ இடத்துக்கு வந்து,  அவர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து, அவர்கள் போலீஸார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், போலீஸாரின் 8 வாகனங்கள் சேதமடைந்தன.  மேலும் மூன்று போலீஸார் மற்றும் பொதுமக்கள் என சுமார் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தியும் நிலைமை கட்டுக்குள் வராததால், துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களைக் கலைத்தனர்.  இச்சம்பவத்தால், பொன்னமராவதி பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதுடன்  கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும்  பொன்னமராவதி ஒன்றியத்தில் ஆங்காங்கே சாலையின் குறுக்கே மரங்களைப் போட்டு அச்சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொன்னமராவதி ஒன்றியத்தில் பதற்றமான சூழல் நிலவியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த சம்பவ இடத்தைப் பார்வையிட்ட புதுகை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி:  பொன்னமராவதி உள்பட 42 கிராம ஊராட்சிகளில் 144 தடை உத்தரவு வரும் 21 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். எனவும் பொன்னமராவதியில் தற்போது சட்டம் ஒழுங்கு அமைதியாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் காவல் துறை உயர் அதிகாரிகள் இங்கு வந்துள்ள நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :