மத்தியில் இடம் கிடைக்குமா? - எதிர்பார்ப்பில் அதிமுக
மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தில் 38 இடங்களில்லபோட்டியிட்ட அதிமுக, 1 இடத்தில் மட்டுமே வென்று பெரும் தோல்வியை சந்தித்தது. தமிழகத்தில் தோல்வியை சந்தித்த போதிலும், அதன் பிரதான கூட்டணி கட்சியான பாஜக அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளனர்.
கூட்டத்தில் மத்திய அமைச்சரவையில் யாருக்கு எந்த இடம் அளிப்பது என்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. ஒருவேளை, அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் வாய்ப்பு உருவானால், தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் அமைச்சராக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதிமுகவில் பேச்சு நிலவுகிறது.