முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்த மையம் கட்டும் திட்டம்

Home

shadow

 

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்த மையம் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தும் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, வரும் 20-ஆம் தேதி அதனை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

தேனி மாவட்டத்தையொட்டி கேரள எல்லையில் அமைந்துள்ள தேக்கடிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்த குமுளி அருகே உள்ள ஆனவாசல் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்த மையம் அமைக்க கேரள வனத் துறை இடம் தேர்வு செய்தது. இந்த இடம் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருப்பதாக சென்னை தென் மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தில் குமுளியைச் சேர்ந்த தாமஸ் என்பவர், கடந்த 2014-ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தார். பின்னர் இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், குமுளி ஆனவாசல் பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கும் பணிகளுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தடை விதித்தது. இருப்பினும் குமுளி பகுதியில் கட்டடங்கள் இல்லாத வாகன நிறுத்த மையம் அமைத்துக் கொள்ள தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்த அனுமதிக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்த மையம் அமைக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதிக்கும், வாகன நிறுத்த மையம் போன்ற நிரந்தர கட்டுமானப் பணிகளுக்கும் இடைக்காலத் தடை விதித்தது. இது தொடர்பாக கேரளம் மற்றும் தமிழக அரசுகள் தங்கள் கருத்துகளை பதில் மனுக்களாகத் தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வில் தமிழக அரசின் மூத்த வழக்குரைஞர் உமாபதி நேற்று ஆஜராகி, தமிழக அரசு தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை வரும் 20-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

 

இது தொடர்பான செய்திகள் :