கர்நாடக அணைகளில்
இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணை முழு
கொள்ளளவை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் இடையே எழுந்துள்ளது.
காவிரி நீர்
பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த கன மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி,
கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் அங்கிருந்து வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம்
கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கல்
வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக
உயர்ந்து 100 அடியை தாண்டியது. இந்த நிலையில்
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளதால்
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. இந்நிலையில் நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம் 111
புள்ளி 4 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாகவும், அதே நேரத்தில்
அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனிடையே கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், மேட்டூர்
அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள், பொதுமக்கள்
மத்தியில் எழுந்துள்ளது.