விசாரணைக்கு அழைத்து சென்று 28 ஆண்டுகள் நிறைவு - பேரறிவாளன் குறித்து தாயார் அற்புதம்மாள் உருக்கம்

Home

shadow

                  விசாரணைக்கு அழைத்து சென்று 28 ஆண்டுகள் நிறைவு - பேரறிவாளன் குறித்து தாயார் அற்புதம்மாள் உருக்கம்

 ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பாக பேரறிவாளனை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று இன்றுடன் 28 ஆண்டுகள் முடிந்து விட்டன. இது குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்திட வேண்டுமென பேறிவாளனின் தாயார் மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மத்திய- மாநில அரசுகளுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட  ஏழு பேரின் விடுதலை குறித்து மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த உத்தரவினை அடுத்து ஏழு பேரையும் விடுதலை செய்திடக் கோரி தமிழக அரசும், ஆளுநருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் ஆளுநர் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை.

பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்று 29 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில் அவரின் தாயார் அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 அதில், பேரறிவாளனை விசாரணை என்ற பெயரில் போலீசார் அழைத்துச் சென்று 28 ஆண்டுகள் கழிந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விடிந்தவுடன் அனுப்பி வைக்கிறோம் என்ற வாக்குறுதியுடன் பேரறிவாளனை போலீசார் அழைத்துச் சென்றதாகவும், ஆனால், 28 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், இன்று வரை அந்த இரவு விடியவே இல்லை என்றும் அற்புதம்மாள் மிகுந்த சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

 அரசியல் கொலையில் சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதியின் துன்பத்திற்கு உதாரணமாக தமது மகன்  பேரறிவாளனின் வாழ்க்கை மாறி விட்டதாகவும், உண்மைக் குற்றவாளியை கண்டறிய வேண்டியவர்கள், மறைந்த தலைவர் பெயரால் அருவருப்பான அரசியல் செய்வது வேதனை அளிப்பதாகவும் அற்புதம்மாள் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.

 முன்னதாக, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்திட மாநில அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமென தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :