7 பேர் விடுதலை வழக்கு ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது – தமிழக அரசு வாதம்

Home

shadow

               7 பேர் விடுதலை வழக்கு ஆளுநருக்கு  நீதிமன்றம் உத்தரவிட முடியாது – தமிழக அரசு வாதம்

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு, நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தமிழக அரசின் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

இந்த நிலையில், கடந்த 8 மாதங்களாக இந்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நளினி தரப்பில் ஆஜரான வக்கீல் ராதாகிருஷ்ணன், அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநர்  அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

மேலும், ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காததால், மனுதாரர் உள்பட 7 ஏழு பேரும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவே கருதப்படுகின்றனர் என்றும் வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் சட்ட ஆலோசனை செய்து வருவதாகவும், அமைச்சரவையின் பரிந்துரையை பரிசீலிக்க வேண்டும் என ஆளுநருக்கு, நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இது தொடர்பான செய்திகள் :