கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பின் எதிரொலியாக, பங்குச் சந்தை கடும் சரிவு

Home

shadow

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பின் எதிரொலியாக, இந்தியாவில் பங்குச் சந்தை இன்று கடும் சரிவைச் சந்தித்தது. இதனால் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சுமார் 300 புள்ளிகளும், தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சுமார் 100 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இருப்பினும் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு இந்தத் தடையில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இந்தச் சலுகையை ரத்து செய்ய அமெரிக்கா தற்போது முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது பாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வருகிறது. இது இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று எதிரொலித்துள்ளது. இதன் விளைவாக, சென்செக்ஸ் எனப்படும் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் இன்றைய வர்த்தகத்தில் ஒரு கட்டத்தில் 300 புள்ளிகளுக்கும் மேல் குறைந்தது. மிக அதிக அளவில் பங்கு விலைச் சரிவைச் சந்தித்த நிறுவனங்களில்,  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க், பார்தி ஏர்டெல், இண்டஸ் இண்ட் வங்கி, ஆசியன் பெயின்ஸ்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத் தக்கவை. இதேபோல் நிஃப்டி எனப்படும் தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணும் சுமார் 100 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.


இது தொடர்பான செய்திகள் :