அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம்பளம், அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் வரை இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு
வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யம் தனது தேர்தல் அறிக்கையில்
வெளியிட்டுள்ளது.
கோவையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், அக்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். மேலும், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையினையும் வெளியிட்டார். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில், 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை, 500 திறன் மேம்பாட்டு மையங்கள் , கவர்னரை அந்தந்த மாநில எம்எல்ஏக்களே தேர்வு செய்ய நடவடிக்கை, உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழி, அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம்பளம், அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் வரை இடஒதுக்கடு வழங்க நடவடிக்கை, 25 சதவீதம் மேல் பெண்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, குடிசை இல்லா தமிழகம், உச்ச நீதிமன்றத்தின் கிளைகள், இந்தியாவின் 6 மண்டலங்களில் நிறுவ வலியுறுத்தல், பொதுபட்டியலுக்கு எடுத்து செல்லப்பட்ட 5 துறைகள் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும், டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்றப்படும், தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த விவசாய மண்டலம், ரேசன் பொருட்கள் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.