ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர்ந்துள்ளன - அமித் ஷா

Home

shadow

                        ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர்ந்துள்ளன என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மாநாடு, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அமித் ஷா பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகள் ஓரணியாகத் திரள்வதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த அணியில் உள்ள எந்தவொரு தலைவருக்கும் கொள்கையும் கிடையாது; அவர்களிடம் வளர்ச்சித் திட்டமும் கிடையாது எனவும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியே அவர்களை ஒன்றிணைத்துள்ளது எனவும் தெரிவித்தார். உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவரான பிரதமர் மோடியை பாரதிய ஜனதா பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், மோடியின் தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, மக்கள் நலத் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாகவும், பிரதமர் மோடியைத் தவிர வேறு யாராலும் மத்தியில் வலிமையான ஆட்சியைத் தர முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, வரும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெறுவதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனவும் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான், நாட்டின் வளர்ச்சியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும் எனவும் அமித் ஷா தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :