மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா உதவ வேண்டும் : இந்திய வெளியுறவுத்துறை

Home

shadow

மசூத் அஸாரை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா உதவ வேண்டும் என சீனா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீ உடன் நடைபெற்ற  பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத் தலைவரான மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது. இதுவரை 4 முறை இந்த தீர்மானத்துக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஆதரவளித்த போதிலும், சீனா அதை நிராகரித்து விட்டது. எனவே,  வரும் நாள்களில் மீண்டும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில், மீண்டும் இந்தியா சார்பில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு சீனா சென்றுள்ள வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே கோரிக்கை விடுத்தார். மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரும் இந்தியாவின் தீர்மானத்துக்கு, சீனா தனது ஆதரவை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். சீனா சென்றுள்ள விஜய் கோகலே, வெளியுறவு அமைச்சர் வாங்-யீயுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இதனை வலியுறுத்தினார்.  பேச்சுவார்த்தை குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் டெல்லியில் கூறுகையில் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான ஆதாரங்களையும் சீனாவிடம், விஜய் கோகலே சமர்பித்ததாகவும் அவரது இயக்கம் நடத்திய பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களையும் சீனாவிடம் அளித்தாகவும் தெரிவித்தார். மேலும் மசூத் அஸார் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதாக சீனாதரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் ரவீஷ்குமார் தெரிவித்தார்.


இது தொடர்பான செய்திகள் :