முகநூல் நிறுவனம் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது

Home

shadow


தொழில்நுட்ப கோளாறு காரணாக ஒரு கோடியே 40 லட்சம் பயனாளர்களின் தனியுரிமைத் தகவல் பதிவில் பாதிப்பு ஏற்பட்டதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் முகநூல் நிறுவனம், அண்மைக் காலமாக அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற தேர்தல் ஆய்வு நிறுவனத்துடன், தனது வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை முகநூல் நிறுவனம் பகிர்ந்து கொண்டது முதலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது பயனாளர்களின் தகவல்களை ரகசிய ஒப்பந்தத்தின் பேரில் ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்பட 60 செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் முகநூல் நிறுவனம் பகிர்ந்து கொண்டது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, வரும் 20-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முகநூல் நிறுவனத்துக்கு, மத்திய அரசு நோட்டீசும் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், முகநூல் நிறுவனம் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. முகநூல் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு கோடியே 40 லட்சம் பயனாளர்கள் தங்களது தனியுரிமை சார்ந்த தகவல்களைத், தெரியாமலேயே பொதுவெளியில் பகிர்ந்திருப்பார்கள் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. அதாவது, முகநூல் பயனாளர் ஒருவர் தனது கணக்கில் தனிப்பட்ட பதிவாக வெளியிடுவதற்கு முன்னரே தேர்வு செய்திருந்தாலும் அது தற்போது பொதுவெளியில் பகிரப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. இது பயனாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ள நிலையில், கடந்த காலத்தில் தனியுரிமையை தேர்ந்தெடுத்து பகிர்ந்த தகவலில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் முகநூல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது

இது தொடர்பான செய்திகள் :