ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்
கட்டுமானம் கொண்ட மும்முனை நேர்மின்சாரத்தில் இயங்கும் நெடுந்தொலைவு மின்சார ரயிலை சென்னை ஐசிஎப்- நிறுவனம் முதன் முறையாக
தயாரித்துள்ளது.
நகரங்களுக்கிடையே
இயக்கப்படும் நெடுந்தொலைவு மின்தொடர் வண்டிகள் இதுவரை எதிர்மின்சக்தியால் இயங்கும்
மோட்டார்களைக் கொண்டவையாக இருந்தன. ரயில் தடங்களின் மேல் உள்ள மின் இணைப்புகள் 25 கிவோ
நேர்மின்சக்தி வழங்குவதால் மின்மாற்றத்தில் ஏற்படும் சக்தி இழப்பை சரி செய்ய, சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் எனப்படும் இந்தியன் கோச் பேக்டரி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்
கட்டுமானம் கொண்ட மும்முனை மின்சாரத்தில் இயங்கும் நெடுந்தொலைவு மின்தொடர் வண்டியை
முதன் முறையாக தயாரித்துள்ளது. இதனால் நெடுந்தொலைவு மின்சார ரயில்கள் முன்பை விட வேகமாகவும், குறைந்த
மின்சக்தி உபயோகத்திலும் இயக்க முடியும். இந்த மின்சார ரயிலில் 2 ஆயிரத்து 402 பேர்
பயணிக்கலாம். இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. இரு
புறங்களிலும் விமானம் போன்ற கூர்முகப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், காற்றைக்
கிழித்துக் கொண்டு செல்வதுடன், மின்சக்தி உபயோகம் குறைவாக இருக்கும். முதன்முறையாக ஐசிஎப்
தயாரித்துள்ள இந்த மும்முனை நேர்மின்சக்தி நெடுந்தொலைவு மின் ரயிலை ஐ.சி.எப்.
பர்னிஷிங் பகுதி மூத்த ஊழியர்களில் ஒருவரும் ரயில்வே வாரிய முன்னாள் இயந்திரப்
பொறியியல் துறை உறுப்பினருமான எஸ்.தாசரதி, ரயில்வே வாரிய
முன்னாள் நிதி ஆணையர் திருமதி விஜயா காந்த், ஐசிஎப்
அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.