ரஃபேல் விவகாரம் - விசாரணை கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது

Home

shadow

                           ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.


இந்திய விமானப் படைக்காக, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலை வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சௌரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது, ரஃபேல் விமானம் தொடர்பான விவரங்களை, மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து சமர்ப்பிக்கும்படி, மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதுதொடர்பாக இருதரப்பு வாதத்தை உச்சநீதிமன்றம் பதிவு செய்துகொண்டது. மேலும் நீதிமன்ற கண்காணிப்பு விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ரஃபேல் ஒப்பந்தம் குறித்த உண்மைகளை பொதுவெளியில் வெளியிடாமல், அந்த விமானத்தின் விலை தொடர்பான விவாதத்தை முன்னெடுக்க முடியாது. எனவே, விலை விவரத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டுமா? என்பது குறித்த முடிவை தாங்கள் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :