32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கைவிடப்பட்டது

Home

shadow

கடலில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் 12 போர்க்கப்பல்களை, மேக் இந்தியா திட்டத்தின்கீழ் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக, தென் கொரிய நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட இருந்த 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம், கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.       

 

           கடலுக்குள் எதிரிகள் புதைத்துவைக்கும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான மைன்ஸ்வீப்பர் வகை போர்க்கப்பல்கள், இந்தியாவில் தற்போது நான்குதான் உள்ளன. குறைந்தபட்சம் 24 மைன்ஸ்வீப்பர் போர்க்கப்பல்கள் தேவைப்படுகின்ற நிலையில், இவ்வகையில் 12 கப்பல்களை வெளிநாட்டு நிறுவனக் கூட்டுடன் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. மேக் இந்தியா எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ், கோவா கப்பல்கட்டும் தளத்தில் 12 மைன்ஸ்வீப்பர் போர்க்கப்பல்களை உருவாக்குவதற்காக, தென் கொரியாவின் கங்க்நாம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

         32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், இறுதி செய்யப்படும் நிலையில் திடீரென ரத்தாகியுள்ளது. உற்பத்திச் செலவைக் குறைத்தல், தொழில்நுட்பத்தை வழங்குதல் உள்ளிட்டவற்றில் நீடித்த சிக்கல்களால் இந்த ஒப்பந்த முயற்சி கைவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நிறுவனத்தின் கூட்டுடன் 12 மைன்ஸ்வீப்பர் போர்க்கப்பல்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குமாறு, பொதுத் துறை நிறுவனமான கோவா ஷிப்யார்டு நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பான செய்திகள் :