அமெரிக்காவின் பங்களிப்பில் 28 கோடி டாலர் குறைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே அறிவித்துள்ளார்

Home

shadow

ஐ.நா. வின் செயல்பாடுகளுக்கான வரவு செலவு திட்டத்துக்கு தேவையான தொகையில் அதிக அளவு அதாவது 22 சதவீதம் அமெரிக்காவின் பங்கு என ஐக்கிய நாடுகள் சபை விதிகள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த ஆண்டு 2016-2017 பட்ஜெட்டான 540 கோடி  டாலரில் அமெரிக்கா 120 கோடி டாலரை அளித்தது. மேலும் ஐ.நா வின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு தேவையான தொகையில் 28  புள்ளி 5 சதவீதத்தை அமெரிக்கா வழங்குகிறது. ஐ.நா. வின் செயல்பாடுகளுக்கு தேவையான தொகையில் பெருமளவு அமெரிக்கா தருவதால், அந்நாட்டுக்கு ஐ.நா.வும், உலக நாடுகளும் அடிபணிய வேண்டும் என்பதே அமெரிக்காவின் எண்ணம் என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததை ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள மற்ற நாடுகள் எதிர்த்தது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை அளித்தது. இதனையடுத்து ஐ.நா. பொதுச் சபை வாக்கெடுப்புக்கு முன், அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தால், அதன் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். வாக்கெடுப்புக்குப்பின் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, அமெரிக்காவை ஐ.நா. வில் அவமதித்த நாடுகளுடனான உறவு முன்போல இருக்காது என்று எச்சரித்தார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , ஐ.நா.வின் செலவுகளைக் குறைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், 2018-2019 பட்ஜெட்டுக்கான அமெரிக்காவின் பங்களிப்பில் 28 கோடி  டாலர் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகள் மேலும் தொடரும் எனவும் நிக்கி ஹாலே எச்சரித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :