கடன் மோசடியாளர்களுக்கு எந்த வங்கியும், நிதி நிறுவனமும் கூடுதலாகக் கடனுதவி அளிப்பதில்லை - மத்திய நிதியமைச்சர்

Home

shadow

                   பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாத மோசடியாளர்களுக்கு எதிராக, நிகழாண்டில் மட்டும் 2 ஆயிரத்து 571 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.


பொதுத் துறை வங்கிகள் கடன் பெற்றுக் கொண்டு திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி,   பொதுத் துறை வங்கிகள் அளித்த தகவல்களின்படிநிகழாண்டில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை, வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக 2 ஆயிரத்து 571 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நிதி மோசடியாளர்களிடம் இருந்து கடன்தொகையை வசூலிப்பதற்காக, 9 ஆயிரத்து 363 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும், நிதி மோசடியாளர்கள் உருவாவதை தடுக்கவும், அவர்களிடம் இருந்து கடனைத் திருப்பி வசூலிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் மேற்கொண்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்படிகடன் மோசடியாளர்களுக்கு எந்த வங்கியும், நிதி நிறுவனமும் கூடுதலாகக் கடனுதவி அளிப்பதில்லை என தெரிவித்த அவர், நிதி மோசடியாளர்கள் புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கு 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது எனவும் கூறினார். நிதி மோசடியாளர்களுக்கு எதிராகக் கடன் கொடுத்த வங்கிகள் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்ய முடியும் எனவும் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 45-இ பிரிவின்படி, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாத கடன் மோசடியாளர்கள் பற்றிய விவரங்களை வங்கிகள் வெளியிட முடியாது என்றும் தனது பதிலில் அவர் குறிப்பிட்டிருந்தார். பன்னாட்டு நிறுவனங்கள், தனி நபர் என 568 பேர், வங்கிகளில் கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாத தொகையின் அளவு மட்டும் 6 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான செய்திகள் :