சென்னையில் தமிழக பட்ஜெட் தாக்கல்

Home

shadow

 

வரும் 2018 - 19-ஆம் நிதி ஆண்டில் தமிழக அரசின் மாநில பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்பட்ஜெட் பற்றாக்குறை தொகை 53 ஆயிரத்து 586 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் கடன் தொகை 3 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2018 - 19-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ஜிஎஸ்டி-யால் தமிழகத்து நல்ல பலன் கிடைத்துள்ளது எனவும் வரும் நிதியாண்டில் மாநிலத்தின் நிதி வருவாய் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 251 கோடியாக இருக்கும் என்பதால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும்,2018-19-ஆம் ஆண்டில் பட்ஜெட் பற்றாக்குறை தொகை 53 ஆயிரத்து 586 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் கடன் தொகை 3 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கு 8 ஆயிரத்து 916 கோடி ரூபாயும், சுகாதாரத் துறைக்கு 11 ஆயிரத்து 638 கோடி ரூபாயும், பள்ளி கல்வித்துறைக்கு 27 ஆயிரத்து 205 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டு மனை பட்டா வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக அரசுக்கு ஆயத்தீர்வை மூலம் 6 ஆயிரத்து 998 கோடி ரூபாய், பத்திரப்பதிவு மூலமாக 10 ஆயிரத்து 836 கோடி ரூபாய், வாகன வரி மூலம் 6 ஆயிரத்து 212 கோடி ரூபாய், மத்திய அரசு மானியம் மூலம் 20 ஆயிரத்து 627 கோடி ரூபாய் மற்றும்இதர துறைகள்  மூலம் 2018-19-ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என குறிப்பிட்ட நிதியமைச்சர், 2018-19-ஆம் ஆண்டுக்கான செலவு 1 லட்சத்து 91 ஆயிரம் கோடியாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் பட்ஜெட்டில், நகராட்சி நிர்வாகத்துக்கு 13 ஆயிரத்து 986 கோடி ரூபாயும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் களைய அமைக்கப்பட்டுள்ள மாநிலத்தின் வளர்ச்சி நிதியத்துக்கு 100 கோடி ரூபாயும், மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு 786 கோடி ரூபாயும் 26 மாவட்டங்களில் கிராமப்புற புத்தாக்கத் திட்டத்துக்காத 920 கோடி ரூபாயும், ஓய்வூதியத் திட்டத்துக்கு 25 ஆயிரத்து 362 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சானிட்டர் நாப்கின்கள் வழங்க 60 கோடியே 58 லட்சம் ரூபாயும், மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்களுக்கு 545 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் சுய வேலை வாய்ப்பு நிதி 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாகவும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் ஆயிரத்து 500-லிருந்து 2 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2018-19-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு 52 ஆயிரத்து 171 கோடி ரூபாய், ஓய்வூதியத்துக்கு 25 ஆயிரத்து 362 கோடி ரூபாய், மானியம் மற்றும் உதவித் தொகைக்கு 75 ஆயிரத்து 723 கோடி ரூபாய் என இவற்றுக்கு மட்டும் மொத்தமாக 1 லட்சத்து 53 ஆயிரத்து 256 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :