வர்த்தகத்தின் மூலம் இந்திய அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல்

Home

shadow

 

அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வாங்கிய தொடர்பான வர்த்தகத்தின் மூலம் இந்திய அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்தியாவைச் சேர்ந்த இணைய வழி சில்லரை விற்பனை நிறுவனமான ஃபிளிப்கார்ட் சமீபத்தில் தனது 77 சதவீத பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.


சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியது. கடந்த மாதம் இரு நிறுவனங்களுக்கு இடையேயான பங்கு பரிமாற்றம் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த மாதம் 7-ஆம் தேதிக்குள் வரி பாக்கி அனைத்தையும் செலுத்த வால்மார்ட் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை உத்தரவிட்டது.


 இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், தங்களது வரி பாக்கியை செலுத்தி விட்டதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்திய அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி, தங்கள் நிறுவனம் வரி நிலுவை தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்துக் கொண்டதாக தெரிவித்துள்ள வால்மார்ட் நிறுவனம், வரித் தொகை குறித்த தகவலை வெளியிடவில்லை


இந்த வர்த்தகம் மூலம் இந்திய அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :