ஆசிய நாட்டவர்களுக்கு எதிரான இடி அமீனின் உத்தரவு

Home

shadow


      1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் நாள் உகாண்டாவில் உள்ள சிறுபாண்மையினரான ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களை 90  நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார் உகாண்டாவின் அதிபர் இடி அமீன்.  மேலும், இங்கிலாந்து, ஆசிய மக்களை உகாண்டாவிற்குள் பணியமர்த்தி, உகாண்டாவின் பொருளாதாரத்தை வீண் செய்து, ஊழலை ஊக்கபடுத்தியதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அறிவித்தார்.  1972 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதிக்குள் பிரிட்டிஷ்காரர்களால் உகண்டாவில் பணியமர்த்தப்பட்டவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்  இடி அமீன்.   இந்தியா பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷை சேர்ந்தவர்களும் உகாண்டாவை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தார். தெற்காசிய  வம்சாவளியை சேர்ந்த 80,000 க்கும் மேற்பட்டோர் அங்கு வசித்தனர், அவர்களில் பெரும்பான்மையினர் இந்தியாவைச் சேர்ந்த குஜராத் மாநிலத்தவர். அவர்களில் 23,000 பேர் உகாண்டா குடியுரிமைக்கு விண்ணப்பிக்க, அவர்களில் வேறு நாட்டின் குடியுரிமை வைத்திராதவர்களின்  விண்ணப்பங்கள் சர்வதேச கண்டனங்களுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதில் இருந்து விலக்களிக்கப்பட்டது. ஆனால் மேலும் பலர் எதிர்வரும் அச்சுறுத்தல்களை மனதில்கொண்டு,  தாங்களாகவே உகாண்டாவை  விட்டு வெளியேற விரும்பினர். அதிபர் இடி அமீனுக்கு, இந்தியர்கள் மீது இருந்த எதிர்மறை எண்ணங்களே இந்த வெளியேற்றத்தின் பின்னணிக்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது.  மேலும், ஆசியாவைச் சேர்ந்தவர்கள், நம்பகத்தன்மை இல்லாதவர்கள், ஒற்றுமையற்றவர்கள் மற்றும் வணிக  முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் என இடி அமீன் குற்றம் சாட்டினார். வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். இந்த வெளியேற்றத்தின் காரணமாக உகாண்டாவை, மீண்டும் உகாண்டா இனத்தவர்கே கிடைக்கச் செய்ததாக கூறினார் இடி அமீன். 

இது தொடர்பான செய்திகள் :