1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் நாள்

Home

shadow


       நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1918ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் பிறந்த நெல்சன் மண்டேலா, நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். 1962ஆம் ஆண்டு போராட்டங்களை தூண்டியதாக நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். அதன் பிறகு இவர் மேல் தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் நாள் நெல்சன் மண்டேலா மற்றும் அவரை சேர்ந்த ஏழு பேருக்கு தேச துரோக குற்றம் உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம்முழுவதும் எழுந்தது. "மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்னாப்பிரிக்காஅரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா பெப்ரவரி 11, 1990 அன்று விடுதலைச் செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். 1990ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. 1994, மே 10 ஆம் தியதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். (நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.)

-------------------

இது தொடர்பான செய்திகள் :