1967ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி - பொலிவிய ராணுவத்தால் சே குவேரா கைது செய்யப்பட்டார்

Home

shadow


பொலிவியாவின் ராணுவத்தால் சே குவேரா கைது செய்யப்பட்டார். எர்னெஸ்டோ குவேரா என்னும் இயற்பெயர்க் கொண்ட சே அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதிஅரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவராக இருந்தார். இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. "ரக்பி" விளையாட்டு வீரரான சே குவேரா, ஆஸ்த்மா நோய் பாதிப்பு இருந்தும் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். விளையாட்டுடன், படிப்பின் மீதும் அதீத ஆர்வம் கொண்ட குவேராவின் வீட்டில் 3000-த்துக்கும்  மேற்பட்ட நூல்கள் இருந்தன.  1948ஆம் ஆண்டு மருத்துவம் படிக்க சேகுவேரா கல்லூரில் சேர்ந்தார். 1951ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி " The Motorcycle Diaries " என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன்-அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பினார். ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ பட்டம் பெற்றார். பயணங்களின் மூலம் மக்களையும், அவர்கள் சார்ந்த அரசியலையும் தீவிரமாக ஆராய்ந்துக் கொண்டு இருக்கும் போது "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும். பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக் கொண்டு சில பதவிகளையும் ஏற்றார்.  பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார். சே 1966ஆம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு, உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினது ராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே குவேரா கைது செய்யப்பட்டார். இதுவே சே குவேரா தன்னுடைய வாழ்க்கையில் கடைசியாக உயிருடன் இருந்த நாளாகவும் அமைந்தது.


இது தொடர்பான செய்திகள் :