எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகளை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சர்வதேச அமைப்பு, நவீன கட்டுமான தொழில்நுட்பங்களை கைவிட்டு பண்டைய எகிப்தியர்கள் கையாண்ட முறையை பின்பற்ற ஆரம்பித்தது. உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பழமைவாய்ந்த கட்டமைப்பாக எகிப்து நாட்டின் பிரமிடுகள் கருதப்படுகின்றன. கி.மு 26 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 22 ஆம் நூற்றாண்டு வரை ராஜ குடும்பத்தினர் மறைந்தால் அவர்களின் உடல்களை பிரமிடுகளுக்குள் அடக்கம் செய்யும் வழக்கம் எகிப்து நாட்டில் இருந்தது.
இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பிரமிடுகள் கட்டப்பட்டன. இவற்றில் மிகப் பெரியதான (The Great Pyramid) கிரேட் பிரமிட் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1980 களில் கெய்ரோ அருகே உள்ள பிரமிடுகளில் சிதைவுக்கான அறிகுறிகள் தென்பட்டன. 4,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த (Sphinx)ஸ்ஃபிண்க்ஸ் என்ற பிரமிடை புதுப்பிக்கும் முயற்சிகள் தொடங்கின. ஆனால், சிமெண்ட் பூச்சின் போது ஏற்கெனவே இருந்த சுண்ணாம்பால் ஆன கற்கள் பிளவுபட ஆரம்பித்தன. அதன்பின் நவீனகட்டுமான தொழில்நுட்பங்களை கைவிட்டு பண்டைய எகிப்தியர்கள் கையாண்ட முறையையே பின் பற்றி பிரமிடு சீரமைக்கப்பட்டது.