1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் நாள்

Home

shadow


      மூன்றாவது முறையாக பிரிட்டனின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மார்கரெட் தாட்சர். 1800 ஆம் ஆண்டுக்கு பின் மூன்று முறை தொடர்ச்சியாக ஒருவர் பிரிட்டனின் பிரதமராக இருந்தது இதுவே முதல் முறை. 1979ஆம் ஆண்டு மார்கரெட் தாட்சர் பிரிட்டனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார். பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1979 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 11 வருடங்கள் பிரிட்டன் பிரதமராக பணியாற்றினார். இவருடைய துணிச்சலான நடவடிக்கைகளால் இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டார். வேதியியல் ஆய்வாளராக தன் பணியை துவங்கிய மார்கரெட் பின்னர் சட்டம் படித்து பார் அட் லா ஆனார். 1970இல் எட்வர்டு ஹீத் தலைமையிலான அரசில் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1975ஆம் ஆண்டில் நடந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் ஹீத்தை தோற்கடித்து பிரிட்டனின்  எதிர்கட்சித் தலைவரானார். 1979ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார். 1982இல் பாக்லாந்து போரில் பெற்ற வெற்றி மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் இவருக்கு ஆதரவைப் பெருக்கியது. இதனால் 1983ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். தாட்சர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் நவீன தாராளமயமாக்கல் பாதைக்கு வழிவகுத்தது. 1987இல் மீண்டும் வெற்றிபெற்று பிரதமரானார். 1970-களில் பெரும்பாலும் உலக நாடுகள் பலவற்றிலும் ஆண்களே அரசியல் தலைமை பொறுப்புகளை வகித்து வந்த நிலையில் தொடர்ச்சியாக பிரிட்டன் பேரரசின் பிரதமராக மூன்று முறை பொறுப்பு வகித்தார் மார்கரெட் தாட்சர். (மார்கரெட் தாட்சர் மூன்றாவது முறையாக பிரிட்டன் பிரதமரானார்) 

இது தொடர்பான செய்திகள் :