குளிர்கால ஒலிம்பிக் நிறைவு  

Home

shadow

தென்கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற்று வந்த 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று கோலாகலமாக நிறைவடைந்தன.

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இதில் 93 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டிக்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளதால் அந்நாட்டின் வீரர்கள் தனிப்பட்ட போட்டியாளர்களாக களமிறங்கினர். ஈக்வடார்,  மலேசியா, நைஜீரியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகள் முதன்முதலாக பங்குபெற்றன. இந்த போட்டியில் ஐஸ் ஆக்கி, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங் உள்பட 15 வகையான விளையாட்டுகள் இருபாலருக்கும் நடத்தப்பட்டன.  இதில் நார்வே அணி 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது.  14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 31 பதக்கங்கள் வென்று ஜெர்மனி இரண்டாவது இடம் பிடித்தது. 11 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களுடன் கனடா 3-ம் இடம் பிடித்தது. அமெரிக்கா நான்காவது இடத்தையும், நெதர்லாந்து ஐந்தாவது இடத்தையும் பெற்றன. தனிப்பட்ட போட்டியாளர்களாக களமிறங்கிய ரஷ்ய வீரர்கள் 2 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 13-வது இடத்தை பிடித்தனர். இந்த நிலையில் நேற்றுடன் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. இதனையொட்டி பியாங்சங் நகரில் கோலாகலமாக நடைபெற்ற நிறைவு விழாவில் அமெரிக்கா, வடகொரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.  தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகளும், ஆலோசகருமான இவாங்கா டிரம்ப், வடகொரியா மூத்த அதிகாரி கிம் யோங் சோல் உள்ளிட்டோர் நிறைவு விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவின் போது அனைத்து நாட்டு வீரர்களும் தங்கள் கொடியுடன் அணிவகுத்து சென்றனர். தொடக்க விழாவை போல இந்த முறையும் வடகொரியா மற்றும் தென்கொரியா வீரர்கள் கூட்டாக அணிவகுப்பில் கலந்துகொண்டனர். நிறைவு விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குளிர்கால ஒலிம்பிக் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அந்த காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.  இறுதியாக ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு, விழா நிறைவடைந்தது.

இது தொடர்பான செய்திகள் :