நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது

Home

shadow

                             நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதல் முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

12ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி நேற்று இங்கிலாந்தின், லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழுந்து 241 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்களும், டாம் லதாம் 47 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் கிரிஸ் வோக்ஸ், பிளங்கெட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் போட்டி சமநிலையில் முடிந்தது.

இதனையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்களை எடுத்தது. 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 6 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே எடுத்தது. மீண்டும் போட்டி சமநிலையில் முடிந்ததால் பவுண்டரி முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

இதில்,இங்கிலாந்து 26 பவுண்டரிகளும், நியூசிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்திருந்தன. இதனையடுத்து,ஐசிசி விதிகளின் படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை முதல் முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிக்கப்பட்டார்.

இது தொடர்பான செய்திகள் :