நியூஸிலாந்து மகளிர் அணி சாதனை

Home

shadow

 

ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், 490 ரன்கள் குவித்து, நியூஸிலாந்து மகளிர் அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து மகளிர் அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி, டப்ளின் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான பேட்ஸ் 94 பந்துகளில் 2 சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் எடுத்து அசத்தினார். க்ரீன் 77 பந்துகளில் 121 ரன்னும், கெர் 45 பந்துகளில் 81 ரன்னும் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்தது. இதன் மூலம், ஆடவர் மற்றும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதைய அதிகபட்ச ரன் சாதனைகளை முறியடித்து, புதிய சாதனையை நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி படைத்துள்ளது. ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 2016-இல் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்த 3 விக்கெட் இழப்புக்கு 444 ரன்களும், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடந்த 1997-இல் பாகிஸ்தானுக்கு எதிராக நியூஸிலாந்து எடுத்த 5 விக்கெட் இழப்புக்கு 455 ரன்களுமே, இதுவரையில் அதிகபட்ச ரன் சாதனையாகும். இந்த இரு சாதனைகளையுமே நியூஸிலாந்து மகளிர் அணி தற்போது முறியடித்துள்ளது. இதையடுத்து, கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, 35 புள்ளி 3 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்தது. இதனால் 346 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து மகளிர் அணி முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்றது. இந்த ஆட்டம் அந்த அணி வீராங்கனைகளுக்கு மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.  

இது தொடர்பான செய்திகள் :