ஆன்மிகம்

திருவேட்டக்குடி திருமேனியழகர் திருக்கோவில்- காரைக்கால்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே அமைந்துள்ளது, திருவேட்டக்குடி. இங்கு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இவர் ‘திருமேனியழகர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ‘சாந்தநாயகி’ என்பதாகும். சவுந்திரநாயகி என்ற பெயரும் அம்பாளுக்கு உண்டு.

தல வரலாறு:-

சிவனால் முதலில் படைக்கப்பட்டவர் திருமால். இவர் தன் பங்கிற்கு பிரம்மாவைப் படைத்தார். பிரம்மன் இந்த அண்டசராசரங்களையும், அதில் உள்ள உயிர்களையும் படைத்தார். அதைத் தொடர்ந்து உருவான உயிர்கள் அனைத்தும் தங்களின் இனத்தைப் பெருக்கி, தங்கள் வாழ்வை வாழத் தொடங்கின. இப்படி அவரவர் தங்கள் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதைக் கண்ட சிவபெருமான், தனது இருப்பிடமான கயிலாய மலைக்குச் சென்று யோக நிஷ்டையில் அமர்ந்தார். அந்த யோக நிஷ்டையால் தன் உடலும், உணர்வும் அசைவற்று போன நிலைக்குச் சென்றார். இந்த அகிலமே ஈசனின் அசைவில்தான் எனும்போது, அந்த ஈசன் அசைவின்றி போனால் என்ன ஆகும்?.. ஆம்.. ஈசன் அசைவற்றுப் போனதால், உலகத்தின் இயக்கமும், உயிர்களின் இயக்கமும் செயலற்றுப்போயின. விஷ்ணு, பிரம்மாவால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதனைக் கண்டு பிரம்மனும், விஷ்ணுவும் அதிர்ச்சியடைந்தனர். இருவரும் சிவபெருமானிடம் சென்று, யோக நிலையை கைவிட்டு, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டினர். சிவபெருமானும் அவர்களது கோரிக்கையை ஏற்று யோகநிலையை கைவிட்டு அவர்களுக்கு அருள்புரிந்தார். அக்கணமே பிரம்மாவும், திருமாலும் தத்தம் செயல்திறனை மீண்டும் பெற்றனர். உலக உயிர்களும் உயிர்பெற்று பல்கி பெருகி வளரத் தொடங்கின. சிவனின் இந்த அற்புதத்தை அருகில் இருந்து கண்டு வியந்த பார்வதிதேவி ‘‘அண்ட சராசரங்களும், அதில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இயக்கமாக இருப்பது யார்?’’ என்று கேட்டார்.

அதற்கு ஈசன், “நான் தான்” என்று பதிலளித்தார். அதனை ஏற்காத பார்வதிதேவி, “இது உண்மையாயின் சற்றுநேரம் தாங்கள் மூச்சை அடக்கி சும்மா இருங்கள், பார்க்கலாம்” என்று கூற, சிவபெருமானும் அப்படியே செய்தார். இதனால் உலக உயிர்கள் அனைத்தும் மூச்சு விட முடியாமல் திணறின. அதை உணர்ந்த ஈசன், உடனடியாக தன்னுடைய மூச்சை வெளியிட, உயிர்கள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்றன.

பின்னர் தம்மை சோதித்து, உயிர்களுக்கு துன்பத்தை விளைவித்த பார்வதியை நோக்கி, “உயிர்களுக்கு துன்பம் விளைய காரணமாக இருந்த நீ, பூலோகத்தில் பிறப்பாய். மீனவ குலத்தில் பிறந்து என்னை நினைத்து தவம் செய்து, மீண்டும் கயிலாயம் வந்தடைவாய்” என்றார். அதன்படி பார்வதிதேவி, புன்னை வனமாக இருந்த திருவேட்டக்குடி என்ற இத்தலத்தில், குழந்தை வடிவில் கிடந்தார். அவ்வழி வந்த மீனவர் ஒருவர் குழந்தையை பரிவோடும் பாசத்தோடும் எடுத்துச் சென்று வளர்த்தார். பருவ நிலையை அடைந்த பார்வதி, சிவபெருமானை நினைத்து சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்து வந்தார்.

இதற்கிடையில் சோமுகன் என்ற அசுரன், பிரம்மாவிடம் அரிய வரங்களைப் பெற்றதன் காரணமாக தேவர்களை துன்புறுத்தி வந்தான். ஒரு கட்டத்தில் பிரம்மனிடம் இருந்தே வேதங்களை திருடிச் சென்று, கடலுக்குள் ஒளித்து வைத்து விட்டான். இதையடுத்து மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் எடுத்து, கடலுக்குள் இருந்த அரக்கனை அழித்து, வேதங்களை மீட்டுக் கொடுத்தார். அரக்கனை வதம் செய்த பிறகும் கூட விஷ்ணுவின் ஆவேசம் குறையவில்லை. அவர் மீன் உருவத்தில் இருந்தபடியே கடலை கலக்கினார். இதனால் கடலுக்குள் இருந்த பிற உயிரினங்கள் துன்பம் அடைந்தன. உலகமே நடுநடுங்கியது.

இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் அனைவரும், கயிலாயம் சென்று சிவனிடம் இதுபற்றி முறையிட்டனர். சிவபெருமான் அவர்களுக்கு அபயம் அளித்ததுடன், மீனவ உருவம் எடுத்து, கடலை கலக்கிய பெரிய மீனை பிடித்து தரைக்கு கொண்டு வந்து போட்டார். ஈசனின் கரம் பட்டதும் மீனாக இருந்த பெருமாள், சுய உரு பெற்று வைகுண்டம் சென்றடைந்தார்.

பின்னர் மீனவர் வடிவில் இருந்த ஈசன், புன்னை வனக்காட்டில் தவம் மேற்கொண்டிருந்த பார்வதியைக் கண்டு, தன்னுடைய சுய உருவத்தைக் காட்டி அருளினார். தன்னை வணங்கி நின்ற பார்வதியிடம், “வேண்டிய வரம் கேள்” என்றார் ஈசன்.

அதற்கு பார்வதி, “இறைவா.. நான் நிறுவி வழிபட்ட இந்த லிங்கத்தில், தாங்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள வேண்டும்” என்று வேண்டினாள். இறைவனும் அப்படியே அருள் செய்தார். பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன், தீர்த்த யாத்திரை மேற்கொண்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆலய அமைப்பு:-

ஆலயத்தின் முகப்பில் கிழக்கு நோக்கியபடி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுர வாசலைக் கடந்து உள்ளே சென்றதும், விசாலமான முன் மண்டபம் காணப்படுகிறது. அதில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலி பீடம், நந்தி மண்டபம் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் சுந்தர விநாயகர் சன்னிதியும், மேற்குச் சுற்றில் வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான் சன்னிதியும், புன்னை வனநாதர் சன்னிதியும், மகாலட்சுமி சன்னிதியும் இருக்கிறது. வடக்கு நோக்கியபடி பூரணை - புஷ்கலை உடனாய ஐயனார், தெற்கு நோக்கிய நிலையில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் காணப்படுகின்றனர்.

புன்னை வன நாதர் சன்னிதியின் முன்புறம் இடதுபுறத்தில் சம்பந்தரும், வலதுபுறத்தில் தனி சனி பகவானும் இடம் பிடித்துள்ளனர். வடகிழக்கில் நவக்கிரகங்களின் சன்னிதி உள்ளது. அதனை யொட்டி அலங்கார மண்டபமும் நால்வர், பைரவர், சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைந்துள்ளன. கருவறையின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோரும் உள்ளனர். கருவறையில் மூலவர் திருமேனியழகர் என்கிற சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். அம்பாள், சாந்தநாயகி என்ற பெயரில் தனி சன்னிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.

இந்த ஆலயத்தில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்:-

காரைக்காலுக்கு வடகிழக்கே 10 கிலோமீட்டர் தூரத்தில் திருவேட்டக்குடி உள்ளது. பொறையாறு - காரைக்கால் சாலையில் வரிச்சிகுடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து கிழக்கே 2 கிலோமீட்டர் சென்றால், திருவேட்டக்குடியை அடையலாம்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate